ஏன் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு அதிக அளவில் நோய்கள் பரவுகின்றன – ஐநா அமைப்பை சேர்ந்த நிபுணர்கள் விளக்கம்
விலங்குகளின் இறைச்சி தொடர்பாக அதிகரித்துள்ள அளவுக்கு அதிகமான கேள்வியும் மற்றும் தற்பொழுதுமரபணு மாற்றம் செய்யப்படும் விவசாய நடைமுறைகளும் பருவநிலை மாற்றங்கள்களும் தான் இவ்வகையான நோய்கள் உலகளவில் அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளன என ஐ.நா. அமைப்பை சேர்ந்த நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தால் இது மேலும் தொடரும் என்றும் இந்த நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் இந்த அதிகரிப்பு இயல்பாக நடந்தது அல்ல. ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி கழகம் ஆகியவை இணைந்து வெளியிட்ட இந்த அறிக்கையில் சில முக்கிய காரணங்களை குறிப்பிட்டுள்ளனர்.
பருவநிலை மாற்றம், தொடர்ந்து நடக்கும் நில சீரழிப்பு, இயற்கை வளங்களை அதிகளவில் பிரித்தெடுத்தல், லாபங்களுக்காக வனவிலங்குகளை அதிகளவு வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் விலங்குகள் மற்றும் மனிதர்களின் வாழ்வு சீர்குலைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி அதிகமாக விவாதிக்கப்படும் சூழலில் கடந்த காலங்களிலும் இது போன்ற பாதிப்புகள் தோன்றி கடுமையான தாக்கத்தையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளன.
சார்ஸ் கிருமி புனுகுப் பூனையிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியது.
2012ல் உருவாகிய மெர்ஸ் நோயால் 2,494 பேர் பாதிக்கப்பட்டதில் 858 பேர் உயிரிழந்தனர். இது ஒற்றைத் திமில் கொண்ட ஒட்டகங்களிடம் இருந்து பரவியது.
”கடந்த இரண்டு தசாப்தங்களிலும், கோவிட்-19 வைரஸ் பரவலுக்கு முன்பாகவும் ஜுனாட்டிக் வகை நோய்கள் 100 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உலக அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளது,” என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் நிர்வாக இயக்குநரான இங்கர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
”நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் பல லட்சம் மக்கள் ஓவ்வொரு ஆண்டும் இது போன்ற நோய்களால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
“விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களை பெருமளவில் தடுக்க இயற்கை வளங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம்,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
