தோட்டத்தொழிலாளர்களுக்காக இன்று முடங்கியது நுவரெலியா மாவட்டம்.
தோட்டத்தொழிலாளர்களின் ஆயிரம் அடிப்படை சம்பளம் கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸினால் முன்னெடுக்கப்பட்ட ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு பல தரப்பினரும் ஆதரவளித்துள்ளனர்.இதனால் முழு நுவரெலியா மாவட்டமும் முடக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அதிகமான நகரங்களில் உள்ள அனைத்து கடைகளும் பூட்டப்பட்டுள்ளதுடன் தனியார் பஸ் சேவைகளும் இடம்பெறிவில்லை.நுவரெலியா மாவட்டத்தில் அதிகமான பாடசாலைகள் இன்று ஆசிரியர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதவளித்தன் காரணமாக பெரும் பாலான பாடசாலைகளில் மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

ஹட்டன் நகரில் உள்ள ஒரு சில பாடசாலைகள் முற்றாக மாணவர்கள் வருகை தராததன் காரணமாக மூடப்பட்டிருந்ததுடன் ஆசிரியர்களும் வருகை தரவில்லை. ஒரு சில பாடசாலைகளில் மாத்திரம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் வருந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதே நேரம் ஹட்டன் நகரிலிருந்து தோட்டப்பகுதியினை நோக்கி சேவையில் ஈடுபடும் எந்த ஒரு பஸ்ஸூம் இன்று சேவையில் ஈடுபடவில்லை. இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான ஒரு சில பஸ்கள் மாத்தரமே இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.எனினும் குறைந்த அளவில் மக்கள் நகரங்களில் காணப்பட்டதனால் நகரங்கள் வெரிச்சோடி காணப்பட்டன.

இதே நேரம் மலையகத்தில் இயங்கும் ஆடைத்தொழிற்சாலைகளும் இன்று இயங்கிவில்லை முச்சக்கர வண்டி சாரதிகள் இன்று இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவளிததுள்ளதனால் நகரங்களில் முச்சக்கரவண்டி தரிப்பிடங்களும் வெரிச்சோடிக்காணப்பட்டன.

தோட்டங்களில் இன்று முழுமையான அர்தால் அனுஸ்டிக்கப்பட்டதனால் எந்த ஒரு தொழிற்சாலையும் இயங்கவில்லை.தொழிற்சாலைகள் பூட்டிக்கிடந்ததுடன் தேயிலை மலைகளும்; வெரிச்சோடிக்காணப்பட்டன.
தனியார் பஸ்கள் இன்று சேவையில் ஈடுபடாததன் காரணமாகவும் உணவகங்கள் பூட்டப்பட்டிருந்ததன் காரணமாக வைத்தியசாலைகளுக்கு செல்பவர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கினர்.

எது எவ்வாறான போதிலும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் என்பது கடந்த பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்துள்ளன. கடந்த வரவு செலவு திட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று பரிந்துரைகள் செய்யப்பட்ட போதிலும் அதனை கம்பனிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
தொழிற்சங்கங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கள் வெற்றியளிக்கவில்லை இந்நிலையிலேயே இந்த அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆகவே இந்த வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு கட்சி இன மத மொழி பேதங்கள் பாராமல் அனைவரும் ஆதரவளித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர் தொடர்ந்து இதனை இழுத்தடிக்காமல் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும்;.
