அவசரகதியில் தயாரிக்கப்பட்டுள்ள இரஷ்யாவின் தடுப்பூசியால் ஆபத்து நேரலாம்; தொற்று நோய் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
இரஷ்யாவை சேர்ந்த கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி இம்மாதம் 12ஆம் திகதி பதிவு செய்யப்பட உள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது.
உலக நாடுகள் தீவிரமாக தடுப்பூசி மருந்துகள் தயாரிக்க போராடி வந்தாலும் இவற்றில் முன்னிலையாக, இரஷ்யாவை சேர்ந்த இந்நிறுவனம் அனைத்து வகையான பரிசோதனைகளும் நிறைந்ததாகவும், இம்மாதம் பதிவு செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏனெனில் தடுப்பூசி தயாரிக்கும் போது மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இதுவரை அந்நிறுவனம் செய்த முதற்கட்ட பரிசோதனைகளின் முடிவுகள் கூட வெளிப்படாத நிலையில் மிகவும் அவசரகதியில் தயாரித்து உலகிலேயே முதன்முதலாக கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்த நாடு என்ற பெருமையை அடையும் நோக்கில் செயல்படுவதாக ஏனைய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளது.
போர்க் கருவிகளின் பயன்பாடுகள், விண்வெளிப் பயணங்களின் சாதனைகள் போன்றவற்றில் ஏற்படும் போட்டிகள் போல் மனிதர்களை சார்ந்த நோய்களிலும், நோய் சார்ந்த கண்டுபிடிப்புகளிலும் போட்டி போடுவது ஆரோக்கியமான எதிர்காலம் அல்ல என்பதே அனைவரின் கணிப்பு. தாமதமாக தடுப்பூசி வெளியிட்டாலும் பரவாயில்லை முழுமையான மருத்துவ பரிசோதனைகளை அடைந்தபிறகு வெளியிட வேண்டும்.

