அரசியல் அமைப்பு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டால் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு கொடுக்கும் என்று அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அந்த ஆதரவு புதிய அரசியர் சீர்திருத்தத்திற்கான ஆதரவாக இருக்குமே தவிர, அரசாங்கத்திற்கான ஆதரவாக அமையாது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவருடைய வீட்டில் இன்று காலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கும் பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அரசாங்கத்தை கொண்டுவந்த போது கூட நாங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து ஆதரவளித்திருக்கவில்லை.
ஆனால் எங்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் நாங்கள் நீண்ட தூரம் பயணித்திருக்கின்றோம். குறிப்பாக நகல் வரைபு கூட நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் அதனை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கத்திற்கு 3 இல் 2 பெரும்பான்மை வாக்குகள் தேவைப்பட்டால், அந்த தீர்வானது தமிழ் மக்களின் அபிலாசைகளை சந்திப்பதாக இருந்தால் நிச்சையமாக ஆதரவை கொடுப்போம்.
இதனை நான் நாடாளுமன்றத்திலும் சொல்லியிருந்தேன். ஜனாதிபதி சொல்லியிருந்தார் புதிய அரசியலமைப்பை உருவாக்கப் போவதாக சொல்லியிருந்தார்.
நாங்கள் அரசியலமைப்பு வரைபுகளை செய்த போது குறித்த 3 விடயங்களை ஜனாதிபதியும் தனது உரையில் சொல்லியிருந்தார்.
ஆகவே திரும்பவும் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டியது இல்லை. இந்த நகல் வரைபை வைத்தே நாங்கள் தேவையான மாற்றங்களை கொண்டுவரலாம். இது தொடர்பான சம்பந்தனும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பிரதமரை சந்தித்த போது, 3 இல் 2 பெரும்பான்மை கிடைக்காது. ஆனாலும் இதய சுத்தியோடு புதிய அரசியல் அமைப்பை கொண்டுவரும் போது, அது ஜனநாயக அடிப்படையிலான அரசியலமைப்பாக இருக்க வேண்டும்.
அதிலே தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலே ஏற்பாடுகள் இருக்குமாக இருந்தால், அந்த அரசியல் சீர்திருத்தத்தை வரைவதற்கும், அதை நிறைவேற்றுவதற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவை கொடுப்போம்.
எமது ஆதரவு அந்த செயற்பாட்டிற்கான ஆதரவாகவே இருக்கும். அரசாங்கத்திற்கான ஆதரவாக இருக்காது என்றார்.
நாடு இராணுவ மயமாக்கல் என்ற ஆபத்தான நிலைக்கு சென்று கொண்டுள்ள நிலையில் தமிழர் தரப்பில் மாற்று அணி என்ற கோசத்தை கைவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பலமான அணியாக நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்.
தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவாக பூர்த்தி செய்யக் கூடிய ஒரு அரசியல் தீர்வு ஏற்படுத்துவது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலையான கடமை.
அத்துடன் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்களின் உதவியோடு வடக்கு, கிழக்கிற்கு விசேடமாக பொருளாதர திட்டம் ஒன்று தீட்டப்பட்டு நடமுறைப்படுத்துவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
நவம்பர் புதிய ஜனாதிபதி தெரிவான பின்னர் அவர் எடுத்துள்ள சில நடவடிக்கைகள் அவரின் புதிய ஆட்சி எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதை காட்டும் நல்ல உதாரணங்கள் எமக்கு இப்போதே கிடைத்துள்ளன.
சில ஜனாதிபதி செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. விசேடமாக கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள் தொடர்பான ஒரு செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்கள் வாழ்கின்றார்கள்.
தமிழ் பேசுகிற எவரும் அந்த செயலணியில் உள்வாங்கப்படவில்லை. அகழ்வாராட்சிக்கு பெயர் போனவர் என்று சொல்லப்படுகின்ற பேராணந்த தேரர் அந்த செயலணியில் நியமிகப்பட்டுள்ளார்.
அவருடைய ஆட்சி அனைத்தும் இந்த பிரதேசங்கள் முழுவதும் பௌத்த சின்னங்கள் உள்ள பிரதேசங்கள், அந்த மேன்மையை தொடர்ந்து பேண வேண்டும் என்று வாதாடுகின்றவர்தான் அந்த தேரர்.
இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அந்த செயலணியில் உள்ள அனைவரும் சிங்களவர்களாகவே உள்ளார்கள்.
நாட்டிலே ஒழுக்கத்தை பேணுவதற்காக பாதுகாப்பு செயலாளர் தலமையிலே இன்னுமொரு செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஒழுக்கத்தை பேணுவதற்கு பாடசாலைகள், மத ஸ்தாபனங்கள் அல்ல இராணுவம் மக்களிடத்தில் ஒழுக்கத்தை கொண்டுவரப் போகின்றதாம். அதற்கு ஒரு செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
பல அமைச்சு செயலாளர் பொறுப்புக்கள் இழைப்பாறிய இராணுவ அதிகாரிகளிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படியான இராணுவ மயமாக்கல் என்பது மிக தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த சூழ்நிலையிலே நாடாளுமன்ற ஜனநாயகம் ஒடுக்கப்படுகின்றது, பிரதிநிதித்துவ ஜனநாயகம் இல்லாவிட்டால் இவர்கள் ஒருவருகும் பொறுப்புக்கூற தேவையில்லாத சூழ்நிலை ஏற்படலாம் என்ற ஆபத்துக்கள் இப்பொழுது நாட்டை சூழ்ந்திருக்கின்றன.
ஆகவே தென்னிலங்கையிலே அவர்கள் பலமான நிலமையில் இருந்திருந்தாலும் கூட எங்களுடைய பிரதேங்களில் எமது இருப்பை காப்பாற்றி வைத்திருக்க வேண்டிய ஒரு மிகவும் முக்கியமான தேவை ஏற்பட்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில்தான் நாங்கள் தேர்தலுக்கு முகம் கொடுக்கின்றோம்.
ஆகையால் முன்னெப்போதும் இல்லாத வகையிலே தமிழ் மக்கள் ஒன்றிணைத்து ஒரு அணியாக ஒரு பலமான அணியாக நாங்கள் நாடாளுமன்றத்தில் எங்களுடைய பிரதிநிதித்துவத்தை எடுத்துக்காட்ட வேண்டிய தேவை உள்ளது.
நாங்கள் பிரிந்து பல அணிகளாக நாடாளுமன்றம் போவோமாக இருந்தால், அது எங்களை மிகவும் பலவீனப்படுத்தும்.
ஆகையால் இன்று உள்ள அரசியல் கட்சிகள் அல்லது அணிகளை பார்போமாக இருந்தால் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் மக்களை ஒன்றிணைந்து ஒரு அணியாக எங்களுடைய பிதிநிதித்துவத்தை காண்பிக்க கூடிய ஒரே ஒரு அரசியல் கட்சியாக தமிழ் தேசிய
கூட்டமைப்பு இருக்கின்றது.
எங்களுடைய மக்கள் இதனை நினைவுவைத்து மாற்று அணிகள் என்கின்ற கோசத்தை புறக்கணித்து பலமான ஒரு அணியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்பது எமது முதலாவது கோரிக்கை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்திற்கு சென்று என்ன செய்யப் போகின்றது என்ற கேள்வியை பாலர் கேட்கின்றார்கள். கடந்த 5 வருடத்தில் செய்யாதவர்கள் இனி என்ன செய்யப் போகின்றார்கள் என்று கேட்கின்றார்கள்.
நாங்கள் நாடாளுமன்றத்திற்கு செல்லும் போது எங்களுடைய அரசியல் தீர்வைத்தான் வலியுறுத்துவோம். அதிலே எந்தவிதமான சந்தேகம் இல்லை.
தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை வெளிக் கொண்டுவரக்கூடிய, நிறைவாக பூர்த்தி செய்யக் கூடிய ஒரு அரசியல் தீர்வு ஏற்படுத்துவது எங்களுடைய தலையான கடமை. அதிலே நாங்கள் எந்தவித விட்டுக்கொடுப்பும் இல்லாமல் செயற்படுவோம்.
அரசியல் தீர்வு வருகின்ற வரைக்கும் எங்களுடைய மக்கள் வாழ்வு என்ன விதமாக இருந்தாலும் பரவாயில்லை என்ற சிந்தனையில் நாங்கள் இருக்கப்போவதில்லை. கடந்த 5 வருடத்திலும் இது தொடர்பான முன்னெடுப்புக்களை செய்திருந்தோம்.
அரசிடம் இருந்து பணங்களை வருவித்து பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்திருந்தேன். ஒரு கட்டமைக்கப்பட்ட அபிவிருத்திக்குள் நாங்கள் செல்ல வேண்டிய அத்தியாவசிய தேவை உள்ளது.
விசேடமாக பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. இளையவர்களுக்கான வேலைவாய்ப்பதை உருவாக்கும் பொருளாதாரமாக இது இருக்க வேண்டும்.
இது இலங்கை முழுவதும் உள்ள பொருளாதாரமாக இருந்தாலும் கூட வடக்கு, கிழக்கிற்கு விசேடமாக பொருளாதர திட்டம் ஒன்று தீட்டப்பட்டு நடமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இது அத்தியாவசிய தேவை. எமது தேர்தல் அறிக்கையில் இது குறித்து விபரமாக சொல்லுவோம். தமிழ் மக்களின் இருப்பு இந்த நாட்டில் தொடர்ந்து இருக்க வேண்டுமாக இருந்தால். நாட்டில் தொடர்ந்து மக்கள் வாழ வேண்டும்.
வேலைவாய்ப்பு இல்லை, வசதி இல்லை, ஒடுக்குமுறை உள்ளது என்பதற்கான இளையவர்கள் வெளிநாடு செல்லுகின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது தேவையில்லாத சூழல் எற்படும்.
மக்களுடைய இருப்பை பாதுகாப்பதற்கு, அவர்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்கு, பொருளாதாரங்களை கட்டியெழுப்புவதற்கு நாங்கள் திடமான திட்டங்களை வகுப்போம்.
புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலமைவாய்ந்தவர்களுடன் நாங்கள் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களின் உதவிகளோடு பொருளாதார மீளெழுச்சி என்பதற்கு மிகவும் முக்கியமான இடத்தை கொடுப்போம்.
இதன் ஊடாக இளையவர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் சுபீட்சமான வாழ்வு ஏற்படுத்தப்படு வேண்டும் என்பது எமது பிராத்தனை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்;.
