http://ceylononline.lk/

Ceylon Online News Portal

கொரோனா தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் பெருந் தோட்ட மக்களும் அதிக அக்கறை செலுத்த வேண்டும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.தரன் தெரிவிப்பு.

கொரோனா தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் பெருந் தோட்ட மக்களும் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.
டிக்கோயா புளியாவத்தை கீழ்ப்பிரிவு ,இஞ்ஞெஸ்ட்ரி ஆகிய தோட்டங்களில் கொரோனா தொடர்பில் தனிமைப் படுத்தப் பட்டுள்ள 15 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமாரின் சொந்த நிதியில்
பெறப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.


இந்த நிகழ்வில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சோ. ஸ்ரீதரனுடன் , பிரதேச அமைப்பாளர் கேசவன், தோட்ட உதவி அதிகாரி, தொழிற்சங்க உத்தியோகத்தர் திருமதி ஷாமிலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :


கொரோனா தொற்றுநோய் நாட்டில் தீவிரமாக பரவி வருகின்றது. இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
கொரோனா குறித்து நாங்கள் விழிப்புடன் இருக்கவேண்டிய நிலைமை இருக்கின்றது.
கொரோனாவைத் தடுப்பதற்கான சட்டத் திட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உண்டு.
தோட்டப்பகுதிகளில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலே முழுத் தோட்டத்தையும் தனிமை படுத்த வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
தோட்டப் பகுதிகளில் ஏற்கனவே சுகாதார வசதிகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.
இவ்வாறானதொரு நிலைமையில் கொரோனா போன்ற கொடிய நோய்கள் பரவும் பட்சத்தில் அதனை எதிர் நோக்குவது சவாலான காரியமாகிவிடும். இதேவேளை கொரோனா தொடர்பில் தோட்டப்பகுதிகளில் தனிமைப் படுத்தப்படும் நிலைமை ஏற்படும் போது அரசாங்கம் உரிய நிவாரணம் வழங்குவதற்கு முன் வரவேண்டும்.
புளியாவத்தை மற்றும் இன்ஞெஸ்ட்ரி ஆகிய தோட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்த தலைவர் திகாம்பரம் பிரதித் தலைவர் உதயகுமார் ஆகியோருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *