திடீரென்று அதிகரித்த கொரனோ நோயாளர்கள்! ஜெனரல் சவேந்திர சில்வா கவலை
இலங்கையில் அடையாளம் காணப்பட்ட கொரனோ நோயாளர்களின் எண்ணிக்கை நேற்று 3,092 ஆக உயர்ந்தது.
வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படுபவர்களிடமிருந்து தற்பொழுது பெரிய எண்ணிக்கையிலான நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளமையை சாதாரணமாகக் கருத முடியாது என்று இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.
சாலியபுர கஜபா படையணி முகாமில் இன்று செவ்வாய்க்கிழமை புதிய கட்டடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அனைவரும் நாட்டுக்கு அழைத்து வரப்பட வேண்டும். எனினும் அது மிகவும் தெளிவான முறைமைக்கு அமையவே முன்னெடுக்கப்படுகிறது. விமானமொன்றில் ஒரு தடவையில் 200 – 300 பயணிகளே அழைத்து வரப்படுகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் வைரஸ் பரவக் கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதால் குறித்த எண்ணிக்கையில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் இந்த நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும்.
திடீரென்று அதிகரித்த கொரனோ நோயாளர்களின் எண்ணிக்கையை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் சமூகத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்படுவதை முற்றாக கட்டுப்படுத்தியுள்ளோம். அதே போன்ற சூழலை தொடர்ந்தும் உறுதிப்படுத்த வேண்டும்.
ஆரம்ப காலங்களில் பின்பற்றியதைப் போலவே தற்போதும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்றுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
