மலையகத்தில் “மாடி லயம் அல்ல” தனி மாடி வீட்டுத்திட்டமே முன்னெடுக்கப்படும்; கன்னியுறையில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன்
ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் கூரையில்லாத கொங்கிறீற்று போடப்பட்ட தனி வீட்டு திட்டங்களையே முன்னெடுப்பார் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னியுறையில் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்…..
இந்த 9வது பாராளுமன்றத்திலே முதலாவது உரையை ஆற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததற்கு சந்தோஷம் அடைகிறோம்.என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்த எங்களது தேசிய தலைவர் மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஐயா அவர்களுக்கு முதலில் நன்றி கூறவிளைகின்றோம்.
என்னை முதலிலே பிரதேச சபை உறுப்பினராக அதனை தொடர்ந்து பிரதேச சபை உப தலைவராக அதனை தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர், மாகாண அமைச்சர் அவர் இறக்கின்ற பொழுது என்னை இந்த பாராளுமன்றத்திற்கு ஒரு வேட்பாளராக நிறுத்திவிட்டு சென்றார்.
அவர் சென்ற இடத்தை இன்று நுவரெலியா மாவட்ட மக்கள் என்னை இந்த பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்ததையிட்டு நுவரெலியா மாவட்ட மக்களுக்கு முதலிலே நான் நன்றி கூறுகின்றேன பாராளுமன்றம் என்பது எல்லா இன மக்களுக்கும் சேவையாற்றப்படுகின்ற ஒரு நல்ல சந்தர்ப்பத்தை உருவாக்குகின்ற இடம் தான் இந்த பாராளுமன்றம்.
அதேபோன்று கடந்த காலங்களிலே உங்களுக்கு தெரியும் இந்த சபையிலே கூறப்பட்டது நுவரெலியா மாவட்ட மக்களின் வீடமைப்புத்திட்டம் மீண்டும் மாடி லயம் வீடு திட்டமாக செய்யக்கூடுவதாக கூறினார்கள். நிச்சயமாக அந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜீவன் தொண்டமான்; அவர்கள் இருக்கின்றார். நிச்சயமாக நாங்கள் எந்த வகையிலுமே மாடி லயம் வீடு திட்டத்தை மீண்டும் கொண்டுவருவதான நோக்கம் இல்லை. கூரைக்கு பதிலாக மேலே அதற்கு கொங்கிறிற்று இடுவதாக தான் கூறியிருக்கின்றோம். அவர்களுக்கு வசதி வருகின்ற பொழுது அந்த வீடை மேலும் திருத்திக்கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அதேபோன்று இன்று நுவரெலியா மாவட்டத்திலே 600ற்கு மேற்பட்ட உதவி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியதாக கூறினார்கள். மறைந்த தலைவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஐயா அவர்கள் முன்னாள் ஜனாதிபதி கௌரவ மஹிந்த ராஜபக்ஸ அவர்களுடன் பேசி 3000 உதவி ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொடுத்தார். கடந்த நல்லாட்சி அரசாங்கத்திலே அவர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கி இருக்க வேண்டும்.இருந்தாலும் அதை கடந்த நல்லாட்சி அரசாங்கம் செய்யவில்லை.
தொண்டமான் ஐயாவினுடைய எதிர்பார்ப்பு இருந்தது அவர்களை 2 வருடங்களிலே அவர்கள் பயிற்சி அளிக்கப்பட்டு மீண்டும் அவர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்க வேண்டும் என்று. அவர்கள் செய்யாத குறையினால்தான் இன்று அவர்கள் அந்த போராட்டத்திலே ஈடுபட்டிருந்தார்கள். எதுவாக இருந்தாலும் இன்று ஒரு சிறந்த அரசாங்கம் கௌரவ கோட்டாபாய ராஜபக்ஸவினுடைய அரசாங்கம் அமைந்திருக்கிறது. இந்த அரசாங்கத்திலே நிச்சயமாக நாங்கள் கூறியவற்றை மலையக மக்களுக்கு நிச்சயமாக செய்து கொடுப்போம் என கூறிக்கொள்கிறேன்.
