சஜித் பிரேமதாசவை சுவரில் சாய்த்து, பயமுறுத்தி காரியத்தை சாதிக்கிறார்கள் என்ற எண்ணத்தை சிங்களவர் மத்தியில் ஏற்படுத்த பெரும் முயற்சி
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவு சம்பந்தமாக திரு மனோ கணேசன் அவர்கள் ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் இருந்து சில கருத்துகள்
சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சி தலைவர்கள், சஜித் பிரேமதாசவை சுவரில் சாய்த்து, பயமுறுத்தி காரியம் செய்து கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயத்தை இந்நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசாங்க ஊடகங்கள் மற்றும் அரசு சார்பு தனியார் ஊடகங்கள் பெரும் முயற்சி எடுத்தன.
இவ்வாறான வேளையில் இந்த சதித்திட்டத்தை முறியடித்து இந்த இக்கட்டான நேரத்தில் சஜித் பிரேமதாசவிற்கு எங்கள் முழு ஆதரவை தெரிவித்து சிங்கள மக்கள் மத்தியில், இன்னொரு ரணில் விக்கிரமசிங்கவாக, பலவீனமானவராக காட்ட முயலும் அரசின் சதி முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் துணை போகமல் நாங்களே உருவாக்கிய ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை நாமே சிதைக்க கூடாது என நாம் முடிவு செய்தோம்.
ரணில் விக்கிரமசிங்கவை இந்த அரசாங்க கட்சி அணி, அரசு சார்பு பெளத்த பிக்குகள் அணி என்பவை அழித்தன. ஆகவே சஜித் பிரேமதாசவையும், இன்னொரு ரணில் விக்கிரமசிங்கவாகவும், பலவீனமான தலைவராகவும் சித்தரித்து, ஆரம்பத்திலேயே அழித்துவிட இந்த அரசாங்கம் மிகப்பெரும் முயற்சி எடுத்தது. இந்நாட்டில் இன்று ஒப்பீட்டளவில், அனைத்து இனங்களையும் அணைத்து செல்லும் ஒரே சிங்கள தலைவராக இருப்பவர் சஜித் பிரமதாச.
எனவே தேசிய பட்டியலில் ஒரு ஆசனத்தை பெறுவது மட்டும் தான் எங்கள் இறுதி இலக்கு அல்ல. அதை பெறாதது எங்கள் பலவீனமும் அல்ல. அது எங்கள் இயலாமையும் அல்ல. இது தொடர்பாக நாம் எடுத்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும்.
இந்த தொலைநோக்கு பார்வையினாலேயே, தமிழ் முற்போக்கு கூட்டணி, தேசிய பட்டியல் தொடர்பில் நிதானமாக நெகிழ்வு தன்மையுடன் முடிவெடுத்தது
என்றார்
