தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களின் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது: ஜனாதிபதி செயலாளர் அறிவிப்பு
கூட்டுதாபனங்கள், சபைகள், அரசியல் அமைப்புச் சபை ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களின் பதவிகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என ஜனாதிபதி செயலாளர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.
மேற்கூறிய பதவிகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட வேண்டுமென்று நினைத்தால் அதற்கு ஜனாதிபதியின் அனுமதி கண்டிப்பாக தேவை என்றும் அதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் குறித்த நிறுவனங்களுக்கான தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை விசேட குழுவொன்றின் பரிந்துரைக்கு அமையவே நியமிக்கப்பட்டது.
அதனால் அதில் மாற்றம் ஏற்படுத்தாது அவர்களை தொடர்ந்தும் கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி செயலாளர் அந்த கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் சகல அமைச்சிக்களினதும் கடமைகளை ஆரம்பிக்குமாறு புதிதாக பொறுப்பேற்ற அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
