நுவரெலியா மாவட்டத்தில் 75 சதவீதமானோர் வாக்களிப்பு (வீடியோ இணைப்பு)
நுவரெலியா மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 498 வாக்கெடுப்பு நிலையங்களில் இன்று (05) திகதி காலை 7.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை வாக்கெடுப்புக்கள் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்றன.
எந்தவொரு வாக்கெடுப்பு நிலையத்திலும் எந்தவிதமான அசம்பாவிதங்களும் பதிவாகவில்லையென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இம்முறை நுவரெலயா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 12 அரசியல் கட்சிகளும் 13 சுயேட்சைக்குழுக்களும் உள்ளடங்களாக 275 பேர் இத்தேர்தலில் களமிறங்கியிருந்தனர்.
இந்த மாவட்டத்தில் 8 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் 5 இலட்சத்து 77 ஆயிரத்து 717 பேர் வாக்களிக்க தகுதிபெற்று இருந்தனர்.
காலை வேளையில் சீரற்ற காலநிலை காரணமாக வாக்களிப்புக்கள் மந்தகதியில் நடைபெற்ற போதிலும் மாலைவேளையில் அதிகமானவர்கள் வாக்களித்திருந்தனர்.
இதனால் தோட்டப்பகுதியில் சுமார் 82 சதவீதமான வாக்குகளும் கிராமப்பகுதியில் 62 சதவீதமான வாக்குகளும் நுவரெலியா மாவட்டத்தில் சாதாரணமாக 75 சதவீதமான வாக்குகளும் அளிக்கப்பட்டு இருப்பதாக நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமார தெரிவித்தார்.
தேர்தல் கடமைகள் நிறைவுபெற்று தற்போது வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டுசெல்லும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தன.இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் கடமைகளுக்காக 4000 அரச உத்தியோகத்தர்களும் வாக்கெண்ணும் பணிகளுக்காக 2000 அரச உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு பணிகளுக்காக 1500 பொலிஸாரும் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
நாளைய தினம் 06.08.2020 நுவரெலியாவில் நான்கு வாக்கெண்ணும் நிலையங்களில் 95 பிரிவுகளில் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் முதலாவது தேர்தல் முடிவு பகல் 1.00 மணியளவிலும் விருப்பு வாக்கு இரவு 7.00 மணியளவிலும் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஸ்பகுமார தெரிவித்தார்.
