காலம் காலமாக மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதிகளை வாரி வழங்கி ஆட்சியிலிருக்கவே முயற்சி; அனுசியா சந்திரசேகரன் ஆதங்கம்
மலையகப்பகுதியில் அதிகமாக பெண்களே தேயிலைத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு எவ்வித வசதியும் கிடையாது. குளவிகள் கொட்டினாலோ சிறுத்தைகள் கடித்தாலோ எவ்வித தொழில்பாதுகாப்பும் கிடையாது. இவர்கள் வேலைசெய்யும் இடங்களில் இவர்களுக்கென்று அவசரத் தேவைகளை பூர்த்திசெய்யக்கூடிய கழிவறைகள் கூட கிடையாது.
இவ்வாறு இன்று (21.07.2020) தலவாக்கலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அனுசியா சந்திரசேகரன் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மலையக பெண்கள் 75 வருட காலமாக அடிப்படை வசதியின்றியே வாழ்ந்து வருகின்றனர் . இவர்கள் வாழும் வீட்டினை எடுத்துக்கொண்டால் ஒரு அறைக்குள் நான்கு ஐந்து குடும்பங்கள் வாழ்கின்றன. மழைக்காலங்களில் ஒழுகும் வீட்டில் குழந்தைகளை வைத்துக்கொண்டு ஆண்டாண்டு காலமாக பல துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள்.அவர்களுக்கென்று எவ்வித சுதந்திரமும் இல்லை.

மலையகத்தில் எத்தனையோ பெண்களுக்கு சுயதொழில் செய்யக்கூடிய திறமை இருந்தும் அவர்கள் பொருளாதார கஷ்டம் காரணமாக சுயதொழிலில் ஈடுபடமுடியாத நிலையிலேயே உள்ளனர். எனது தந்தை இருக்கும் போது எத்தனையோ பேருக்கு அரசாங்க தொழிலைப்பெற்றுக்கொடுத்தார்.
ஆனால் இன்று என்ன நடந்துள்ளது. தொழிலின்றி எமது இளைஞர் யுவதிகள் அல்லலுறுகின்றனர். எத்தனையோ தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன. எவராவது பேசி தொழிற்பேட்டைகளை உருவாக்கினார்களா? காலம் காலமாக மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதிகளை வாரி வழங்கி ஆட்சியிலிருக்கவே முயற்சி செய்கின்றனர்.
எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு எவ்விதத்தீர்வும் இதுவரை காணப்படவில்லை. எனவே தான் இவர்களுக்காக எவரும் குரல் கொடுக்காததன் காரணமாக உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்ற ஒரே ஆதங்கத்தில் தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.
இதில் நான் வெற்றி பெற்றால் மலையகப்பெண்களை கௌரவமாக தமது தொழில்களை முன்னெடுப்பதற்கு வேண்டிய சூழலை உருவாக்குவேன்.அவர்களின் உரிமைக்காக குரல்கொடுப்பேன். பொருளாதார கட்டமைப்புக்களை உருவாக்குவேன். அரசியல் சமநிலையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.
இன்று மக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான இடைவெளி காணப்படுகின்றது. அந்த இடைவெளியை போக்கி அரசியல் சமநிலையை உருவாக்கி மக்களை வாழ வழிசெய்வேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
