கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக சட்ட விதிமுறைகளை உள்ளக்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு அழுத்தம்
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் சட்டங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சு துரிதமாக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, பொது சுகாதார பரிசோதகர்களையும் மக்களையும் அபாய நிலைக்கு இட்டுச் செல்ல நாம் தயாரில்லை என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலுக்காக தனிமைப்படுத்தல் சட்டங்களை உள்ளடக்கி சுகாதார அமைச்சினால் எவ்வித வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படவில்லை. தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்திற்கு அமைய அதிகாரங்களைப் பயன்படுத்துவது பற்றியும் எவ்வித உத்தியோக அறிவிப்பும் இதுவரையில் விடுக்கப்படவில்லை.
அதே போன்று தொடர்ச்சியாக இவ்வாறு அபாய நிலைமையை கவனத்தில் கொள்ளாமல் செயற்படுகின்றமைக்காக அதிகாரிகளை தொடர்ந்தும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்க நாம் தயார் இல்லை. எனவே எதிர்வரும் சில தினங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக சட்ட விதிமுறைகளை உள்ளக்கிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு கோருகின்றோம்.
மேலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அனைத்தையும் சட்டமாக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். அவ்வாறு செய்யவில்லை என்றால் பொது சுகாதார பரிசோதகர்களையும் பொது மக்களையும் ஆபத்திற்குள் தள்ள நாம் தயார் இல்லை. எனவே பொது சுகாதார பரிசோதகர்களை சேவையிலிருந்து நீக்கி பொது மக்களுடன் இணைந்து கொரோனா ஒழிப்பிற்காக செயற்பட வேண்டிய முறைகளை சட்டமாக்குமாறு சுகாதார அமைச்சிற்கு அழுத்தம் பிரயோகிப்பதற்கு தயாராகவுள்ளோம் என்றார்.
