http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மலையக இளைஞர்களால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் -கொட்டகலை பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளர் திகா தெரிவிப்பு

தேர்தல் காலத்தில் இளைஞர்களை திசை திருப்புவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதில் ஏமாந்து விடாமல் மலையக இளைஞர்களால் தான் சமூக மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்து மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான பழனி திகாம்பரம் கேட்டுக் கொண்டார்.

கொட்டகலை பிரதேசத்தில் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,

இது ஒரு முக்கியமான தேர்தல் ஆகும். மலையக மக்களின் வாக்குகளைக் கூறு போடுவதற்காகவே நுவரெலியா மாவட்டத்தோடு சம்பந்தம் இல்லதார்கள் எல்லாம் இங்கு வந்து வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றார்கள். அதற்காக தோட்டங்களுக்கு படையெடுத்து இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களைக் கொடுத்தும், அற்ப சலுகைகளை செய்து கொடுப்பதாக ஆசை வார்த்தைகள் கூறியும் ஏமாற்றி வருகின்றார்கள்.

இளைஞர்களின் விளையாட்டு முயற்சிகளை ஊக்குவிக்க இதுவரை காலமும் சிந்தக்காதவர்கள் எல்லாம், தேர்தல் காலம் வந்து விட்டதால் கூடுதலான அக்கறையும் ஆர்வமும் கொண்டவர்களாக மக்கள் மத்தியில் வந்து நாடகம் ஆடுகின்றார்கள். இதை எமது இளைஞர்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடந்த காலங்களில் அரசியல் ரீதியாக மக்களுக்கு சேவைகளைப் பெற்றுக் கொடுத்தவர்கள் யார், உரிமை சார்ந்த விடயங்களை பாராளுமன்றத்துக்குக் கொண்டு வந்து அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அமுல் படுத்தக் காரணமாக இருந்தவர்கள் யார் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தால் எதிர்காலத்தில் நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

நான் கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த போது தனி வீட்டுத் திட்டத்தை முன்னெடுத்து அதற்கான காணி உறுதிப் பத்திரங்களையும் பெற்றுக் கொடுத்திருந்தேன். அதை வங்கியில் வைத்து கடன் பெற்று அவர்களின் வீடுகளை மேலும் விஸ்தரித்துக் கொள்ள முடியும். அந்தளவுக்கு இலட்சக் கணக்கான ரூபா பெறுமதி வாய்ந்த வீடுகள் இலவசமாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், எனது பதவிக் காலத்தில் 15 ஆயிரம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தன. சுமார் 8 ஆயிரம் வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வந்த நேரத்தில் அரசியல் ரீதியான குழப்பங்கள் ஏற்பட்டு பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருந்தது. அத்தோடு, மேலும் 10 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆனால், எனக்குப் பிறகு அமைச்சுப் பொறுப்பை ஏற்றவர்கள் வீடுகளைப் பூரணப்படுத்தி மக்களிடம் கையளிக்க முயற்சிக்கவில்லை. எந்த வகையான அபிவிருத்திப் பணிகளும் கடந்த ஆறு மாத காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், விமர்சனங்களுக்கு மாத்திரம் குறைவு இருக்கவில்லை.

நாம் அபிவிருத்திப் பணிகளையும் உரிமை சார்ந்த பிரதேச சபை அதிகரிப்பு, செயலகங்கள் அதிகரிப்பு, அதிகார சபை, வீட்டு உரிமை என பலவற்றைச் செய்து கொடுத்திருந்தும் மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக நாலரை வருடங்களில் எதையுமே செய்யவில்லை என்று வாய்கூசாமல் பிரசரம் செய்து வருகின்றார்கள். அவர்கள் தமது பிரசாரங்களை மேற்கொள்ள மலையகப் பகுதிகளுக்கு வரும் போது, அங்காங்கே காட்சி தரும் வீடுகளைப் பார்க்கும் போது நாம் செய்த வேலைகள் நன்றாகத் தெரியும். யார் வேலை செய்திருக்கின்றார்கள் என்பதும் புரியும்.

மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் எமக்குக் கிடைக்கும் பெரும்பாலான ஆசனங்களைக் கொண்டுதான் எமது அரசியல் ரீதியான பேரம் பேசும் சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும். எனவே, இளைஞர்களால் தான் மலையகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்ப தமது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் மூவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *