http://ceylononline.lk/

Ceylon Online News Portal

அபிவிருத்திப் பணிகளை செய்து காட்டி விட்டு மக்கள் மத்தியில் வாக்குகள் கேட்கிறேன் -மஸ்கெலியா பிரதேச மக்கள் சந்திப்பில் வேட்பாளர் திகாம்பரம்

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு உண்மையான சேவையை செய்து காட்டி விட்டுத்தான் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றேன். எனவே, கடந்த கால எனது சேவைகளை சீர்தூக்கப் பார்த்து மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் பட்சத்தில் அதைவிடக் கூடுதலான அபிவிருத்திப் பணிகளை செய்து காட்டுவேன் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பலருமான பி. திகாம்பரம் தெரிவித்தார்.

Thigambaram Ceylononline

நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாக மஸ்கெலியா பிரதேச மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர் பா. சிவநேசன் தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் வீ. இராதாகிருஸ்ணன், எம். உதயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

வேட்பாளர் திகாம்பரம் தொடர்ந்து பேசுகையில்,

தேர்தல் காலம் வந்து விட்டால் யார் யாரோ வந்து எந்தெந்த சின்னத்திலேயோ வாக்குகள் கேட்கின்றார்கள். ஏனைய பிரதேசங்களை விட மலையக மக்கள் செறிந்து வாழும் நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள். அவர்களால் வெற்றி பெறமுடியாது என்று தெரிந்திருந்தும் எமது மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் ஏஜன்டுகளாக சிலர் களம் இறங்கியுள்ளார்கள்.

ஒரு காலத்தில் மலையக மக்கள் ஏமாந்தவர்களாக இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், காலம் செல்லச் செல்ல எமது இளைஞர்களின் சமூக ரீதியான சிந்தனையும் அக்கறையும் மலையக மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மலையகத்தின் மாற்றத்துக்காக தமிழ் முற்போக்கு கூட்டணி வாக்குகள் கேட்ட போது எம்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களை ஏமாற்றாமல் தேவையான அபிவிருத்தித் திடங்களையும் உரிமை சார்ந்த விடயங்களையும் நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம்.

ஆனால், தேர்தல் காலம் வந்தவுடன்தான், எமது மக்களோடு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் தோட்டங்களுக்கு ஓடி வந்து அதைச் செய்து தருகின்றோம், இதைச் செய்து தருகின்றோம் என்று வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருகின்றார்கள். வாக்குறுதியை யார் வேண்டுமானாலும் தரலாம், ஆனால், செய்து கொடுக்கக் கூடிய வல்லமை யாரிடம் இருக்கின்றது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் அமைச்சர்களாக பதவி வகித்த காலத்தில் அற்ப சொற்ப சலுகளைகளுக்கு அரசாங்கத்திடம் விலை போய்விடவில்லை. மாறாக அரசியல் ரீதியில் பிரதேச சபைகள், செயலகங்கள, அபிவிருத்தி அதிகார சபை போன்ற உரிமை சார்ந்த விடயங்களோடு எமது மக்கள் தன்மானத்தோடு வாழக் கூடியதாக தனி வீடுகளைக் கட்டிக் கொடுத்து அவர்களை கௌரவமுள்ள பிரஜைகளாக வாழ்வதற்கு சமூக அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

நாலரை ஆண்டுகளில் இவ்வளவு தூரம் செய்ய முடியும் என்றால் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு எமக்கான அரசியல் அங்கீகாரத்தைக் கொடுத்தால் அதைவிட கூடுதலான அபிவிருத்தித் திட்டங்களை ஏற்படுத்திக் கொடுப்போம் என்பதில் ஐயமில்லை. எனவே, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து இனிமேல் தான் மக்களுக்கு சேவை செய்யப் போகின்றோம் என்று கூறுகிறவர்களை நம்பி ஏமாந்து போவது நல்லதா அல்லது கடந்த காலங்களில் உண்மையான சேவை செய்தவர்களுக்கு மீண்டும் வாக்களித்து வெற்றி பெறச் செய்வது நல்லதா என்பதை மக்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

நான் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மக்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்கி விட்டுத்தான் அடுத்த தேர்தலில் வாக்கு கேட்க வருவேன் என்று கூறியிருந்தேன். நான் கூறுவதும் செய்ததும் சரியா இல்லையா என்பதை ஏனைய வேட்பாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து சரியான தீர்ப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் எங்கள் வெற்றியில் தான் பெருந்தோட்ட மக்களின் எதிர்காலம் சுபிட்சம் நிறைந்ததாக அமையும் என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *