இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில் விவகாரம்: கூட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டது!
இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் தொடர்பாக இன்று (14) நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின்போது கடும் சொற்போர் மூண்டது. இதனால் கூட்டத்தை இடைநடுவிலேயே கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டதுடன் தீர்வுகளை முன்வைப்பதற்கு ஒருமாத கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
சின்மயா மிஷன் ஆன்மீக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் தலைவர், பிரதம குருக்கள் உள்ளிட்ட நிர்வாக சபையினருக்கும், ஆலயத்தின் புனிதத்தன்மையை பாதுகாக்கும் நோக்கில் இயங்கும் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், பொது மக்களுக்கும் இடையிலேயே குறித்த சந்திப்பு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கையில் செயற்படும் பல இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.
இன்று நடைபெற்ற சந்திப்பின்போது, நிர்வாகத்தில் இடம்பெறும் மோசடிகளையும் பட்டியலிட்டுக் காட்டியதுடன், ஆன்மீக நிறுவனம் எவ்வாறு, வியாபார ஸ்தாபனமாக இயங்குகிறது என்பதும் தொடர்பில் சில இந்து குருமார்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை, மலையக மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிர்வாகம் தற்போது அம்மக்களை ஓரங்கட்டும் வகையிலும் நெருக்கடியான சூழ்நிலைகளில் கூட சேவைகளை வழங்க மறுப்பதாகவும் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் சுட்டிக்காட்டினர்.
புனித பூமியாக கருதப்படவேண்டிய ஆலய வளாகத்துக்குள் இடம்பெறும் சில முறையற்ற செயற்பாடுகள் தொடர்பிலும் இதனால் நிர்வாகக் கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள களங்கள் குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
இதன்போது கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களால் முன்வைக்கப்பட்ட கேள்விக்களுக்கு சின்மயா மிஷனின் இலங்கைக் கிளை அதிகாரிகளால் உரிய பதில்களை வழங்கமுடியாமல் போனமையால் கூட்டத்தையும் இடைநடுவில் கைவிட வேண்டி ஏற்படடுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள தலைமை அலுவலகத்திடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் ஒரு மாதத்துக்குள் தீர்வு ஒன்றை வழங்குவதாக அங்கு உறுதியளிக்கப்பட்டது.
