அரசியல் நோக்கில்லாது இணைந்து செயற்படுவதே எமது பிரதான நோக்கம்
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியவுடன் போராட்டத்தில் ஈடுபடுவது தவறான செயற்பாடு.
அரச ஊழியர்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை பாதுகாப்பு அமைச்சுக்கு கிடையாது. அரசியல் நோக்கமற்ற முறையில் இணைந்து செயற்படுவதே எமது பிரதான நோக்கம் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமெரிக்க தூதரகத்தின் முன்னாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தவறான செயற்பாடு கொரோனா வைரஸ் பரலலை கட்டுப்படுத்த இரண்டு மாத காலத்திற்கும் அதிகமாக நாட்டில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தி முப்படையினரும், சுகாதார தரப்பினரும் அளப்பரிய சேவைகளை முன்னெடுத்தனர்.
பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது.
மக்கள் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதுகாப்பான முறையில் ஈடுபடுத்துவது சவால்மிக்கதொரு செயற்பாடு. பாதுகாப்பான முறையில் மக்களின் இயல்பு வாழ்க்கை வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் தூதரகத்தின் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அமெரிக்க நாட்டில் கறுப்பினத்தவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க தூதரகத்துக்கு பாடம் புகட்டுவதாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பலம் வாய்ந்த அமெரிக்காவிற்கு பாடம் கற்பிக்க எமது நாட்டு மக்களின் சுகாதார பாதுகாப்பினை கேள்விக்குறியாக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.
அரச ஊழியர்கள், திணைக்களங்களின் செயற்பாட்டை கட்டுப்படுத்த பாதுகாப்பு அமைச்சினை உள்ளடக்கிய ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அரச ஊழியர்களை கட்டுப்படுத்த வேண்டிய நோக்கம் பாதுகாப்பு அமைச்சுக்கு கிடையாது.
அனைத்து தரப்பினரையும் ஒன்றுப்படுத்தி அரசியல் நோக்கமற்ற முறையில் பயணிப்பதே எமது எதிர்பார்ப்பு, தேசிய பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கியே பாதுகாப்பு அமைச்சினை உள்ளடக்கிய விசேட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றார்.
