http://ceylononline.lk/

Ceylon Online News Portal

மக்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும்

உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல் இன்னும் தீர்ந்தபாடில்லை. இதனால் மக்கள் மிகுந்த நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர் . குறிப்பாக உலக நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக வீழ்ச்சி  கண்டுள்ளது.

நடப்பு ஆண்டின் உலக பொருளாதார வளர்ச்சி 4.9 வீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதம அதிகாரி கீதா கோபிநாத் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார் . இதேவேளை 2021 ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 நோய்த்தொற்று காரணமாக உலக பொருளாதாரம் பல்வேறு மட்டங்களில் சவால்களை எதிர்நோக்கியது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உல்லாசப் பயணத்துறை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. உணவு உற்பத்தி அதேபோன்று பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. மேலும் விமான போக்குவரத்து சேவைகள் மோசமான பின்னடைவுக்கு தள்ளப்பட்டுள்ளன .

இவை மாத்திரமன்றி சகல விதமான ஏற்றுமதி இறக்குமதி துறைகளும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. இவற்றிற்கு மத்தியில் பலர் தொழில் வாய்ப்பை இழந்துள்ளதுடன் பொருத்தமற்ற தொழில்களை மேற்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் .இதற்கு இலங்கையும் விதிவிலக்கல்ல.

இலங்கையில் பலர் தொழில் வாய்ப்பை இழந்து மிகுந்த தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகியுள்ளனர் .நிலைமை இவ்வாறு இருக்க உலகளாவிய ரீதியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களில் 52,400 பேர் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர் .இவர்களை அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார் .

117 நாடுகளில் உள்ள இலங்கையர்களில் மேற்படி 52,400 பேர் மீண்டும் நாடு திரும்ப விரும்புவதாகக் கூறியிருக்கும் அமைச்சர் இத்தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளார். அத்துடன் இவர்களை அழைத்து வர 10 வரையிலான விமானங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளில் சிரமங்களை எதிர்நோக்கும் இலங்கையர்களே நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்  .

இவர்கள் நாடு திரும்பும் பட்சத்தில் மீண்டும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமா ? அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் போன்ற கேள்விகளும் எழுகின்றன . மறுபுறம் இதுவரை இலங்கைக்கு கிடைத்து வந்த அந்நிய செலாவணியும் வீழ்ச்சியடையும் .இதனால் நாட்டில் பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்படுவதுடன் வேலையில்லாப் பிரச்சினையும் தலைதூக்கும் .

மறுபுறம் நாட்டில் வறுமை தாண்டவமாடுவதுடன்  குற்றச்செயல்களும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். மக்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கும் முகங்கொடுக்க நேரிடும் .

இந்நிலையில் நாட்டில் மீண்டும் இரண்டாவது கொரோனா அலை உருவாகுமானால் அதன் பாரதூரம் எவ்வாறு அமையும் என்பதை அனுமானிக்க முடியாது .இதனை கருத்தில் கொண்டு சகல தரப்பினரும் எச்சரிக்கையாக நடந்து கொள்வது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *