கினிகத்தேனை பகுதியில் தடைபட்ட ஹட்டன் கொழும்பு போக்குவரத்து வழமைக்கு
கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை கொழும்பு பிரதான வீதியில் ரம்பதெனிய பகுதியில் சரிந்துவிழுந்த பாரிய கற்பாறை அகற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று (24) மாலை; முதல் அவ்வீதி ஊடான போக்குவரத்து நடவடிக்கை வழமைக்கு திரும்பியது.
கினிகத்தேன – கொழும்பு பிரதான வீதியில் ரம்பதெனிய பகுதியில் இன்று (24) காலை 6.50 மணியளவில் பாரிய கற்பாறையொன்று சரிந்து விழுந்ததால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டன.

இதனால் கற்பாறையை அகற்றி இயல்புநிலை திரும்பும் வரை ஹட்டனிலிருந்து கொழும்பு செல்லும் அதேபோல கொழும்பில் இருந்து ஹட்டன் வரும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்தினர்.
குறித்;த வீதி தடை காரணமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச அலுவலர்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்தனர்.

இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும், இராணுவத்தினரும் காலை முதல் கற்பாறையை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மாலை 5.30 மணியளவில் கற்பாறையும், மண்ணும் அகற்றப்பட்டதனை தொடர்ந்து பொது போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.
எனினும் மழை வீழ்ச்சி தொடர்;ந்து காணப்படுவதனால் இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தமது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
