http://ceylononline.lk/

Ceylon Online News Portal

விபத்திற்குள்ளான எரிபொருள் கப்பலில் தீ பரவல்; நாட்டின் கடல் வலயம் பாரியளவில் பாதிப்பிற்குள்ளாகும் ஆபத்து

குவைத்திலிருந்து இந்தியா நோக்கிப் பயணித்த MT New Diamond எனும் கப்பல் அம்பாறை – சங்கமன்கண்டியை அண்மித்துள்ள கடற்பகுதியில் விபத்திற்குள்ளானது.

கப்பலின் சமையலறையில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக தீ பரவியிருக்கலாம் என நம்பப்படுவதுடன், இது தொடர்பில் இலங்கை கடற்படைக்கு அறிவிக்கப்பட்டு இலங்கை கடற்படையின் சயுர மற்றும் ரணசிறி கப்பல்கள் குறித்த பகுதியை சென்றடைந்து இரண்டும் தீயை அணைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளன.

கப்பலில் இருந்து எண்ணெய் வௌியேறுமாக இருந்தால் நாட்டின் கடல் வலயம் பாரியளவில் பாதிப்பிற்குள்ளாகும் ஆபத்து காணப்படுகின்றது.

தீயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள ரஷ்ய யுத்த கப்பல்கள் மற்றும் இந்தியாவின் கடற்கரை பாதுகாப்பு படையணிக்கு சொந்தமான மூன்று கப்பல்கள் மற்றும் விமானங்கள் உடனடியாக இலங்கை கடற்படைக்கு உதவுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பனாமா நாட்டின் தேசியக் கொடியுடன் மசகு எண்ணெய், டீசலுடன் குறித்த கப்பல் பயணித்துள்ளது.

தீ பரவிய சந்தர்ப்பத்தில் குறித்த வர்த்தகக் கப்பலில் ஊழியர்கள் 23 பேர் இருந்துள்ளதுடன், அவர்களில் 19 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பெருமளவிலானோர் பிலிப்பைன்ஸை சேர்ந்தவர்களாவர். விபத்தில் காயமடைந்த பொறியியலாளர் மீட்கப்பட்டு, கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கப்பல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கென விமானப்படைக்குச் சொந்தமாக Beechcraft ரகத்தைச் சேர்ந்த கண்காணிப்பு விமானம் ஒன்றும் MY17 ரகத்தை சேர்ந்த ஹெலிகொப்டர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *