http://ceylononline.lk/

Ceylon Online News Portal

யாழ். புங்குடுதீவில் மாணவி வித்தியா படுகொலையின்  குற்றவாளிக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டிற்குக்கு ஆளான, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  மீண்டும் சேவையில் இணைப்பு

யாழ். புங்குடுதீவில் மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளியான சுவிஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சிவகுமார் என்பவருக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் அநுருத்த ஜயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணை வழங்கப்பட்ட போதும் அவர் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கில் தாம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக லலித் அநுருத்த ஜயசிங்க, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகிய லலித் அநுருத்த ஜயசிங்க, தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான பணிப்புரையை விடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பான நிலைப்பாட்டை எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்குமாறு சட்ட மா அதிபருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தமது சேவை பெறுநர் ஓய்வு பெறுவதற்கு 11 மாதங்களே எஞ்சியுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் அநுருத்த ஜயசிங்க சார்பில் ஆணைக்குழுவில் ஆஜராகிய சட்டத்தரணி மகேஸ் கொட்டுவெல்ல குறிப்பிட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நியோமால் ரங்கஜீவவை, பொலிஸ் இன்ஸ்பெக்டராக மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள முடியுமாயின், அநுருத்த ஜயசிங்க தொடர்பிலும் அவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல் என்ன என இதன்போது ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *