http://ceylononline.lk/

Ceylon Online News Portal

இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்து மாகாணசபைத் தேர்தல்கள் நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்ததா?

கொழும்பு நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கூறியதாவது:

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மாகாணசபைத் தேர்தல்களைப் பிற்போடுவதற்கு ஏதுவான வகையில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு ஆதரவளித்து மக்கள் தமது வாக்குரிமையைப் பயன்படுத்துவதற்குத் தடையேற்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இப்போது இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்து மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துவது ஒன்றுக்கொன்று முரணானதாக இருக்கிறது என்று கூறினார்.

உண்மையில் தேர்தலை நடத்தவேண்டுமெனின், அதுகுறித்து பெரும்பான்மையான மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கேள்வி கேட்காமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரைச் சந்தித்து மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று கோருவது வேடிக்கையாக இருக்கின்றது.

கடந்த பாராளுமன்றத்தில் 16 ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட கூட்டமைப்பு இம்முறை 10 ஆசனங்களை மாத்திரமே பெற்றிருக்கின்றது. எனவே அவர்களால் முன்னெடுக்கப்படுகின்ற இனவாதத்தை மையப்படுத்திய நாட்டைப் பிரிக்கும் நோக்கிலான அரசியலை தெற்கில் இருப்பவர்கள் மாத்திரமன்றி வடக்கு, கிழக்கு மக்களும் இப்போது நிராகரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. எனவே உண்மையில் ஏதேனும் பிரச்சினைகள் அல்லது கோரிக்கைகள் இருப்பின் அவைபற்றி பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திடம் பேசவேண்டும் என்று கூட்டமைப்பை வலியுறுத்துகின்றோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *