“ஒன்றிணைந்து செயற்படத் தயார்” பாகிஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமத்
பாகிஸ்தானின் 74 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகிய விடயங்களில் முழுமையான ஆதரவை வழங்குவதோடு, தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருப்பதாக பாகிஸ்தானிய பதில் உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமத் உறுதியளித்திருக்கிறார்.
இந்நிகழ்வானது ‘பாகிஸ்தானை வலுவான, முற்போக்கான, ஆற்றல்மிக்க, சகிப்புத்தன்மையுள்ள ஜனநாயக இஸ்லாமிய நாடாக மாற்றுதல்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.
பாகிஸ்தானின் தேசியக்கொடியை ஏற்றி இந்நிகழ்வை ஆரம்பித்துவைத்த இலங்கைக்கான பாகிஸ்தானின் பதில் உயர்ஸ்தானிகர் தன்வீர் அஹமத், தனது உரையின் போது ‘பல்வேறு சவால்களை எதிர்கொண்டு பாகிஸ்தானின் கனவை அடைவதற்கு ஈடு இணையற்ற தியாகங்களைச் செய்த அனைத்து வீரர்களுக்கும் அஞ்சலிகள் உரித்தாகவேண்டும்’ என்று குறிப்பிட்டதோடு, அந்த வீரர்களின் கனவுகளை நனவாக்குவது அனைத்து பாகிஸ்தானியர்களினதும் பொறுப்பாகும் என்றும், இந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்கு சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் நல்லுறவும் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் பேணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை பரஸ்பர மரியாதை, புரிந்துணர்வு மற்றும் நெருங்கிய ஒத்துழைப்பு என்பவற்றின் அடிப்படையில் இலங்கையுடன் கட்டியெழுப்பப்பட்டிருக்கும் உறவிற்கு பாகிஸ்தான் மிகுந்த மதிப்பளிக்கின்றது என்றும் அவர் தெரிவித்தார். பாகிஸ்தான் தொடர்ந்தும் இலங்கைக்கு அதன் ஆதரவை வழங்கிவருவதாகக் கூறிய அவர், குறிப்பாக இலங்கையின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகிய விடயங்களில் ஒன்றிணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரக அதிகாரிகள், பாகிஸ்தான் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது
