மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் தேவஸ்தான பரிபாலன சபை தலைவருக்கு எதிராக சி.ஐ.டி. விசாரணை
கொழும்பு 11, பிரதான வீதி முகவரி கொண்ட வர்த்தகர் ஒருவர் கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைவாக மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் தேவஸ்தான பரிபாலன சபை தலைவரும், பிரபல வர்த்தகருமான பெரியசாமி சுந்தரலிங்கத்துக்கு எதிராக சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவும், சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இரு வேறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனியார் வங்கியொன்றின் வெள்ளவத்தை கிளையில் உள்ள வங்கி இலக்கம் ஒன்றுக்கு சொந்தமான சுமார் 12 மறுக்கப்பட்ட காசோலைகளையும் தமது பொறுப்பில் எடுத்து சுமார் 5 பேரின் வாக்கு மூலங்களை பதிவு செய்து மேலதிக விசாரணைகளை தொடர்கின்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வணிக விசாரணைப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இந் நிலையில் கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்கவுக்கு விசாரணை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம்,
முறைப்பாட்டாளர் வெள்ளவத்தை பகுதியில் ரொபின்சன் பிரைவட் லிமிடட் எனும் நிறுவனத்தை நடாத்தி செல்வதாகவும், அவரது நிறுவனத்தின் முகாமையாளராக கோவிந்தன் ராஜ் குமார் செயற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் வெள்ளவத்தை, மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் தேவஸ்தானத்தின் பொறுப்பாளர் இறந்த பின்னர், தற்போதைய பரிபாலன சபையின் தலைவரான பெரியசாமி சுந்தரலிங்கம் முறைப்பாட்டாளருடன் இணைந்து 2013 அல்லது 2014 முதல் தேவஸ்தான பரிபாலன நடவடிக்கைகளை முன்னெடுத்து சென்றுள்ளார்.
இந் நிலையில் குறித்த தேவஸ்தானத்தின் புதுப்பித்தல் நடவடிக்கைகளின் போது, தேவஸ்தானத்தின் பொருட்களை வைக்க, வெள்ளவத்தை மாயா எவனியூ பிரதேசத்தில் இடம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. 26.30 பேர்ச் விஸ்தீரனமான அந்த இடத்தை சுந்தர லிங்கமும் முறைப்பாட்டாளரான அசோக் குமாரும் 13.15 பேர்ச் வீதம் இரு பிரிவுகளாக இணைந்து கொள்வனவு செய்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் முறைப்பாட்டாளரிடம், சுந்தரலிங்கம் என்பவர் தனது கோல்டன் மெடல் கன்சோரியம் தனியார் நிறுவனத்தை (Gold Medal Consortium Pvt Ltd.) நடாத்திச் செல்ல நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அதனை ஈடு செய்ய 2 கோடியே 50 இலட்சம் ரூபா பணம் கோரியுள்ளார். அந்த பணத்தை பெற்றுக்கொள்ள பிணையமாக, வெள்ளவத்தை மாயா எவனியூவில் கொள்வனவு செய்யப்பட்ட காணியில் தனது பங்கான 13.15 பேர்ச் இடத்தை வைப்பதாகவும் மீள 6 மாதங்களுக்கும் பெறும் கடன் தொகையை செலுத்துவதாகவும் சுந்தரலிங்கம் முறைப்பாட்டாளருக்கு கூறியுள்ளார்.
இந் நிலையில், முறைப்பாட்டாளர் தனது முகாமையாளரான கோவிந்தன் ராஜ் குமாருடன் கலந்துரையாடிய பின்னர், தனியார் வங்கியொன்றின் புதுக்கடை கிளையில் உள்ள 001010167743 எனும் கணக்கூடாக 2017 ஆம் ஆண்டின் ஜூன் மாத திகதியொன்றில் 25 000 000 ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந் நிலையில் 2017 ஜூன் 15 ஆம் திகதி, சட்டத்தரணி ஹுசைன் அஹமட் என்பவரின் கொள்ளுபிட்டி அலுவலகத்தில் இந்த பணத்தொகை கடனாக வழங்கப்படுவது தொடர்பிலான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன்போது, முறைப்பாட்டாளரே பணத்தை நேரடியாக அந்த சட்டத்தரணி அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளதுடன் பணத்தை பெற்றுக்கொள்ள கோல்டன் மெடல் கென்சியூரியம் தனியார் நிறுவன பணிப்பாளர் சுந்தரலிங்கத்தின் மனைவி சுதர்ஷனி கலையப்பன் அவரது மகள் சாந்தி குமாரி சுந்தரலிங்கம் ஆகியோர் அவ்வலுவலகத்துக்கு வந்துள்ளனர்.
இந் நிலையில் 4341 எனும் ஒப்பந்த இலக்கத்தைக் கொண்ட அந்த ஒப்பந்ததில் வாக்களித்ததன் பிரகாரம் 6 மாதங்களுக்குள் பெற்றுக்கொண்ட குறித்த பணத்தை திருப்பி கொடுத்துதிவிட்டு பிணையமாக வைக்கப்பட்டுள்ள இடத்தை மீட்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் அன்றைய தினமே சுதர்ஷனி கலையப்பன் அவரது மகள் சாந்தி குமாரி சுந்தரலிங்கம் ஆகியோருக்கு 25 000 000 ரூபா பணம் முறைப்பாட்டாளரால் கொடுக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் அவிஸ்ஸாவளை, பாணந்துரை பகுதிகளைச் சேர்ந்த பிருவர் சாட்சியாளர்களாகவும் கையெழுத்திட்டுள்ளனர்.
4341 ஆம் இலக்க ஒப்பந்தம் பிரகாரம், முறைப்பாட்டாளருக்கு 6 மாதம் கழிந்தும் குறித்த பணம் திருப்பி செலுத்தப்படாமையால் 2018 ஆகஸ்ட் 17 ஆம் திகதி , முறைப்பாட்டாளர் தனது வர்த்தக கடிதத் தலைப்பில் ஞாபகப் படுத்தல் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார். எனினும் அதற்கு பதில் அளிக்கப்படாததால் 2019 ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி சட்டத்தரணி ஹுசைன் அஹமட் ஊடாக பணத்தை கோரும் கடிதம் அனுப்பட்டுள்ளது.
அந்த கடிதத்துக்கு சுந்தரலிங்கம் என்பவரின் சட்டத்தரணியான எஸ். தேவபாலன் ஊடாக பதில் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதில், 25 000 000 பணத்தில் 2017.12.22 அன்று 15 000 000 ரூபா முறைப்பாட்டாளரான ராமசந்ரன் அசோக் குமார் என்பவரின் 001010159489 எனும் வங்கிக்கணக்குக்கும், முறைப்பாட்டாளரின் முகாமையாளரான கோவிந்தன் ராஜ் குமாரின் 001010167743 எனும் வங்கிக்கணக்குக்கு 2018.01.08 ஆம் திகதி 15 000 000 ரூபா பணத்தையும் வைப்பிலிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதற்கு 2019.10.15 ஆம் திகதியன்று முறைப்பாட்டாளரின் சட்டத்தரணி மீள கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளதுடன், அதில் 4341 எனும் ஒப்பந்ததுக்கு அமைய பிணையம் தொடர்பில் அந்த வைப்புக்கள் சம்பந்தப்படவில்லை என தெரிவித்துள்ளதுடன், 25 000 000 பணத்தை செலுத்துமாறு கூறியுள்ளார். அந்த கடிதத்துக்கு எந்த பதிலும் இதுவரை அனுப்படவில்லை என தெரிவிக்கும் முறைப்பாட்டாளர், தனக்கு 25 000 000 பணத்தை திருப்பிச் செலுத்தாமலும், ஒப்பந்தம் பிரகாரம் பணத்தை செலுத்தாத போது தனக்கு சொந்தமாக வேண்டிய பிணையமான காணியையும் தராமல் மோசடி செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந் நிலையில் இது இலங்கை தண்டனை சட்டக் கோவையின் 386,389,403 ஆம் அத்தியாயங்கள் பிரகாரம் தண்டனைக் குறிய குற்றமாகும் என சுட்டிக்காட்டியுள்ள சி.சி.டி., குற்றவியல் சட்டக் கோவை மற்றும் சட்சிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வங்கிக்கணக்குகளை பரிசீலிப்பதர்கான அனுமதியையும் பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இந் நிலையிலேயே முறைப்பாட்டாளர், குற்றம் சாட்டப்படும் தரப்பினர் உள்ளிட்ட பலரின் வாக்கு மூலங்களை பெற்றுள்ள சி.சி.டி., இது தொடர்பில் மேலதிக ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள விசாரணைக் கோவையை சட்ட மா அதிபருக்கு நேற்று அனுப்பி வைத்துள்ளது.
முறைப்பாட்டாளர் பணத்தை திருப்பிச் செலுத்துமாறு தனது சட்டத்தரணி ஊடாக கேட்ட போது, அந்த கடிதத்துக்கு சுந்தரலிங்கம் என்பவரின் சட்டத்தரணியான எஸ். தேவபாலன் ஊடாக பதில் அனுப்பப்பட்டுள்ளதுடன், அதில், 25 000 000 பணத்தில் 2017.12.22 அன்று 15 000 000 ரூபா முறைப்பாட்டாளரான ராமசந்ரன் அசோக் குமார் என்பவரின் 001010159489 எனும் வங்கிக்கணக்குக்கும், முறைப்பாட்டாளரின் முகாமையாளரான கோவிந்தன் ராஜ் குமாரின் 001010167743 எனும் வங்கிக்கணக்குக்கு 2018.01.08 ஆம் திகதி 15 000 000 ரூபா பணத்தையும் வைப்பிலிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அது தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு முன்னெடுத்த விசாரணைகளில் அந்த பணமானது, பிரிதொரு கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கூறி அது சார்ந்த காசோலை ஒன்றின் பிரதியையும் முறைப்பாட்டாளர் விசாரணையாளர்களுக்கு முறைப்பாட்டாளர் வழங்கியுள்ளார். இந் நிலையிலேயே பண மோசடி தொடர்பில் சி.சி.டி. விசாரணைகள் தொடர்கின்றன.
இதனைவிட சி.ஐ.டி.யின் வணிக பிரிவு முன்னெடுக்கும் விசாரணைகளில், 12 நிராகரிக்கப்பட்ட காசோலைகள் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், அவை மயூரபதி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் தேவஸ்தானத்தின் பெயரில் வழங்கப்பட்டுள்ளதுடன், அதனூடாக பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந் நிலையிலேயே சி.ஐ.டி. அது குறித்து விசாரித்து வருகின்றது.
