சமர்செட் தம்பகஸ்தலாவ தோட்டத்தில் மண் சரிவு 07 டுடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் பாதிப்பு.
நானுஓயா சமர்செட் தம்பகஸ்தலாவ தோட்டத்தில் மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான 7 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் தற்காலிகமாக அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையின் காரணமாக பல இடங்கள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் நானுஓயா சமர்செட் தம்பகஸ்தலாவ தோட்டத்தின் லயன் தொடர் குடியிருப்பொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் குடியிருப்புகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதனால் பாதிப்புக்குள்ளான 7 குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் கிராம உத்தியோகத்தரின் ஆலோசனைக்கமைவாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நிவாரண உதவிகள் நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் அப்பகுதி கிராம உத்தியோகத்தர் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன. மலையகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையின் காரணமாக மலையக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மண்சரிவு மட்டுமின்றி மரங்கள் முறிந்து விழும் அம்சங்கள் காணப்படுகின்றன. இதனால் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என்றும் இடர் முகாமைத்துவ அதிகாரிகள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
