சிறிகொத்தாவின் பொறுப்பையோ , ஐ.தே.க.வின் தலைமைத்துவத்தையோ பொறுப்பேற்க விரும்பவில்லை: சஜித் பிரேமதாச
ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் தெளிவான ஆணையை அளித்துள்ளனர். தொலைபேசி சின்னத்திற்கும், எமது தனித்துவம்மிக்க கொள்கை திட்டத்திற்குமே மக்கள் ஆணையை பெற்றுக் கொடுத்துள்ளனர்.
இதனால் சிறிகொத்தாவின் பொறுப்பையோ , ஐ.தே.க.வின் தலைமைத்துவத்தையோ பொறுப்பேற்க நான் விரும்பவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியே தற்போது மக்கள் தெரிவுச் செய்துள்ள மாற்று கட்சி. ஐக்கிய தேசிய கட்சி உட்பட எந்தவொரு தரப்பானாலும் எமது கொள்கைகளை ஏற்றுக் கொண்டு இணைந்து செயற்பட வருவதாக இருந்தால் அதற்கு வெளிப்படை தன்மையுடன் வாய்ப்பளிக்க தயாராகவே உள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அமனுமதியுடனே ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும் , தேர்தல் நெறுங்கிய தருணத்தில் அவர்கள் எடுத்த தீர்மானத்தின் பலாபலனையே தற்போது அனுபவிக்கின்றார்கள். தொடர்ந்தும் அவர்கள் தொடர்பில் பேசுவதற்கு நான் விரும்பவில்லை. ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் தெளிவான ஆணையை பெற்றுக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் தொலைபேசி சின்னத்தில் எமது எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவே நாங்கள் விரும்புகின்றோம் என்று தெரிவித்தார்
