பாரிய மரம் வீழ்ந்து முச்சக்கரவண்டி, வீடு சேதம் 35 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிப்பு
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனராஜா கீழ்ப்பிரிவு தோட்டத்தில் பாரிய மரமொன்று வீழ்ந்ததில் வீட்டின் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றிற்கும் வீட்டிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று 31.07.2020 மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டிற்கு அருகாமையில் காய்ந்து இருந்த பாரிய முருங்கை மரம் ஒன்றே இவ்வாறு வீழ்ந்துள்ளது. இம்மரம் அடியோடு முறிந்து வீழ்ந்ததன் காரணமாக மின்கம்பிகளுக்கும் வீட்டின் கூரைக்கும் முச்சக்கரவண்டிக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.இதனால் குறித்த பிரதேசத்திலுள்ள சுமார் 35 வீடுகளுக்கு மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த காய்ந்த மரம் தொடர்பாக வீட்டு உரிமையாளர் தோட்ட நிர்வாகத்திற்கும் கிராம சேவகருக்கும் அறிவித்த போதும் உரிய நடவடிக்கை எடுக்காததன் காரணமாக இந்த விபத்தைச் சந்திக்க நேர்ந்ததாகப் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

