மலையகத்தில் கடும் பனி மூட்டம்; வாகன சாரதிகள் தமது வாகனங்களை அவதானமாக செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மலையகத்தில் பனி மூட்டம் உடனான காலநிலை நிலவி வருகிறது.இந்த பனி மூட்டம் காரணமாக மலையக வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் தங்களது வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, தியகல, வட்டவளை, ஹட்டன், ஆகிய பகுதியிலும்,ஹட்டன் நுவரெலியா வீதியில் ஹட்டன், குடகம, கொட்டகலை, தலவாக்கலை, சென்கியாhர்,ரதல்ல,நானுஓயா ஆகிய பிரதேசங்களிலும் கடுமையான பனி மூட்டம் காணப்படுவதனால் இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் தங்களது வாகனததின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு தமக்குரிய பக்கத்தில் மிகவும் அவதானமாக செலுத்துவதன் மூலம் வாகன விபத்துக்களை தவிர்த்து கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை வேளையிலும் காலையிலும் பெய்து வரும் மழைக்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன. எனவே மலைகளுக்கும் மண் மேடுகளுக்கும்; அருகாமையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
