பொய் வாக்குறுதிகளை அளித்து என் மீது நீங்கள் வைத்துள்ள மதிப்பையும் மரியாதையையும் வீணடிக்க மாட்டேன்- முத்தையா முரளிதரனின் வசீகரப் பேச்சு
மலையக இளைஞர்களின் கல்வி, விளையாட்டு ஆளுமையை அதிகரிக்க ஜனாதிபதியின் ஒத்துழைப்புடன் புதிய வேலைத்திட்டங்களை உருவாகின்றார் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்
மலையக இளைஞர்களின் கல்வி மட்டத்தையும், சுயதொழில் வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும், அத்துடன் மலையக இளைஞர்களின் விளையாட்டுத்துறை ஆர்வத்தை மேலும் அதிகரிக்க சகல நடவடிக்கைகளையும் ஜனாதிபதியுடன் பேசி பெற்றுத்தருவேன், மக்கள் வழமையான கட்சி அரசியலை தாண்டி அரசாங்கத்தை ஆதரியுங்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கூறுகின்றார்.
நுவரெலியா இளைஞர் அணியின் ஏற்பாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு வேலைவாய்ப்பிற்காக வருகை தந்திருக்கும் இளைஞர் யுவதிகளுடனான சந்திப்பொன்று நேற்று கொழும்பு மட்டக்குளி அங்லோ கிரான்ட் மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கலந்துகொண்டிருந்த நிலையில் அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் மக்கள் தமக்கான பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் மட்டுமே அரசாங்கத்துடன் பேசி தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து பேச முடியும். ஜனாதிபதியை இருபது ஆண்டுகளாக எனக்குத் தெரியும். அவரால் எமக்கான பிரச்சினைகளை தீர்க்க முடியும். இதுவரை அரசாங்கம் அமைத்தவர்களால் தமிழ் மக்களுக்கு செய்தது என்ன. நான் தமிழனாக இலங்கை கிரிக்கெட்டில் இதுவரை காலமாக செயற்பட்டுள்ளேன். ஆனால் நான் தமிழன் அல்ல என்ற பிரசாரம் கூட முன்னெடுக்கப்பட்டது, அதேபோன்று பல வதந்திகள் தமிழர்கள் மத்தியில் பரப்பப்படுகின்றது. அவற்றை தமிழர்கள் நம்ப வேண்டாம். நான் கடந்த கால ஆட்சியாளர்களை விமர்சிக்கவில்லை.


மலையக வீட்டுத்திட்டத்தை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவர வேண்டும் என நான் விரும்புகின்றேன். அவ்வாறு மலையகத்திற்கு வீட்டுத் திட்டத்தை கொண்டுவருவோம் என நான் உறுதியாக உங்களிடம் கூறுகின்றேன். ஜனாதிபதியை நம்பி நாம் களமிறங்கியுள்ளோம். பிரபுவும் மிகச்சிறந்த பிரதிநிதியாக வருவார் என நம்புகிறேன். மக்களும் அதே நம்பிக்கையை வைத்து அரசாங்கத்தை ஆதரியுங்கள் என்றார்.


ஆனால் பல சந்தர்ப்பங்களில் தமிழர்களுக்கு எதனையும் செய்ய எவரும் முன்வரவில்லை.
மலையக மக்களுக்கு இந்திய நிதி உதவியில் வீட்டுத்திட்டம் அமைக்க பாரிய நிதி ஒதுக்கப்பட்டது, ஆனால் அதில் சிறு பகுதியே பயன்படுத்தப்பட்டது, அதனை பெருமையாக சில அரசியல் வாதிகளே கூறுகின்றனர்.
வடக்கு தலைமைகள் போன்று மலையகத் தலைமைகள் செயற்படுவதில்லை, மலையகத்தை மிகவும் மோசமாக ஆண்டுகொண்டுள்ளனர், எமது தலைவர்கள் என கூறிக்கொண்டு வருபவர்களே மலையக மக்களின் வளர்ச்சியை தடுத்துக்கொண்டுள்ளனர். பரம்பரை அரசியல் கட்சிக்கு வாக்களித்து எதனையும் பெற்றுக்கொள்ளாது இருப்பதை விடவும் அரசாங்கத்துடன் கைகோர்த்து எமக்கான சலுகைகளை பெற்றுக்கொள்ள இனியாவது முயற்சிப்போம். மலையக மக்களும் முன்னேற வேண்டும், படிப்பறிவையும் சுய தொழிலையும் கூட்ட வேண்டும். நான் அரசாங்கத்திற்கு வாக்குக் கேட்கவில்லை, ஆனால் மாற்றம் ஒன்றினை இப்போதாவது உருவாக்குங்கள் என்றே கேட்டுக்கொள்கிறேன். மலையகத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் பொறுப்பு எனக்கு உள்ளது. அதற்கான அனுமதியை நான் பெற்றுவிட்டேன். இடங்களை கூட நான் பார்த்துவிட்டேன். இலவசமாக எமது மாணவர்கள் விளையாட்டை கற்றுக்கொள்ள எனது மக்களுக்காக நான் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பேன். இதற்கு அரசாங்கம் பங்களிப்பு செய்கின்றது, அதனையும் தாண்டி எனது பங்களிப்பும் இதில் அதிகமாக உள்ளது.
என்மீது நீங்கள் மரியாதையும், மதிப்பையும் வைத்துள்ளீர்கள், அந்த மதிப்பை கெடுத்துக்கொள்ள நான் இடமளிக்க மாட்டேன். அத்துடன் சுற்றுலாத்துறையை பலப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி நினைகின்றார், என்னுடன் அவர் பேசும் வேளைகளில் மக்களின் பிரச்சினைகளை அவரிடம் கூறி வருகின்றோம்.
எனது நற்குண முன்னேற்ற அமைப்பினூடாக கடந்த 20 வருட காலங்களாக பல சேவைகளை நான் முன்னெடுத்து வருகின்றேன் ஆனால் இதுவரை அதை நான் பகிரங்கப் படுத்த வில்லை.
தேர்தல் முடிவுகள் எவ்வாறு இருந்தாலும் நுவரெலியா மாவட்டத்தில் எனது இந்த அமைப்பினூடாக ஆறு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறக்கப்படும் அத்தோடு லிந்துலையில் ஏற்கனவே பெறப்பட்டுள்ள ஐந்தரை ஏக்கர் காணியில் ஒரு விளையாட்டு பயிற்சி நிலையம் (விளையாட்டு அகாடமி) திறக்கப்படும் என்று இதன்போது வாக்குறுதி அளித்தார்.
