தேசிய நீரோட்டத்தில் எமது சமூகம் கணக்கில் எடுக்கப்படுகின்ற சமூகம் என்றால் அதற்கு காரணம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்; இ.தொ.கா உபதலைவரும் பொதுஜனமுன்னணி வேட்பாளருமான கணபதி கனகராஜ் தெரிவிப்பு
தேசிய நீரோட்டத்தில் எமது சமூகம் கணக்கில் எடுக்கப்படுகின்ற சமூகம் என்றால் அதற்கு காரணம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.காலத்திற்கு காலம் யாராவது வருவார்கள் எதையாவது சொல்லிவிட்டு போவார்கள் ஆனால் உங்கள் மனதில் நிலையாக இருக்கின்றது என்றால் அது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் தான்.ஒருவரை நினைவில் வைக்கவேண்டும் என்றால் சாதாரணமாக நினைவில் வைக்கமுடியாது.அவர் ஏதாவது சமூகத்திற்கு செய்திருக்கவேண்டும்.அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைந்த போது மக்கள் கதறி அழுதததைக் கண்டோம் பெண்கள் கலங்கி நின்றதைக் கண்டோம் இந்த சமூகமே உறைந்துபோயிருந்ததை கண்டோம்.அதற்கு காரணம் ஒரு பெருந்தலைவரை இழந்துவிட்டோம் இனி என்னச்செய்யப்போகின்றோம் என்ற ஏக்கம்.அந்த ஏக்கத்திலேயே தேர்தல் வந்துவிட்டது.இ.தொ.கா வெற்றிபெற்றே ஆகவேண்டும் ஏனென்றால் இந்த சமூகத்தை கட்டிக்காக்கவேண்டுமாக இருந்தால் ஒரு நல்ல தலைமைத்துவத்தை உருவாக்கவேண்டும் என்றால் எல்லோரும் காங்கிரஸை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம் என இ.தொ.கா உபதலைவரும் வேட்பாளருமான கணபதி கனகராஜ் பொகவந்தலாவை பகுதியில் இன்று 18.07.2020 இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின் போது தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் பலர் வருகிறார்கள் அமைச்சர் ஆவோம் என்கிறார்கள்.அமைச்சராக அரசாங்க கட்சியில் இருக்கவேண்டும் பெரும்பான்மை இருக்கவேண்டும்.இந்த அரசாங்கம் 113 ஐப்பெற்று தேர்தலில் வெற்றிபெருவதற்காக போட்டியிடவில்லை 151 இற்கு மேல்; பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப்பெறுவதற்காக போட்டியிடுகின்றது.நிச்சயமாக ஒரு பலமான அரசாங்கம் அமையும் அந்த அரசாங்கத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரசும் பலமாக இருக்க வேண்டும்.அப்போதுதான் நம் உரிமைகளை தலைநிமிர்ந்து கேட்கலாம் இல்லாவிட்டால் தலைகுனிந்து தான் கேட்க வேண்டும்.ஜனாதிபதித் தேர்தலில் நாம் நம் மாவட்டத்தினை இழந்தோம்.அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஜனாபதி தேர்தலின் போது சொன்னார் கோட்டபாய ராஜபக்சவை ஆதரிக்கவேண்டும் என்று ஏனென்றால் அவர்தான் வெற்றிபெறுவார் அவர் செய்யக்கூடியவர் என்று.ஆனால் சிலர் என்ன சொன்னார்கள் கோட்டபாய அவர்கள் வெற்றிபெற்றால் தோட்டத்திற்குள் தோட்டாவுடன் வருவார் என்று மக்களை சுட்டுக்கொல்வார் என்று வெள்ளைவேன் வரும் என்று சொன்னார்கள்.இன்று வெள்ளைவேன் வரவில்லை ஒருலட்சம் வேலைவாய்ப்பில் மலையக இளைஞர் யுவதிகள் கணிசமான பேர் நேர்முகப்பரீட்சைக்கு சென்று வந்துள்ளார்கள்.வேலைவாய்ப்புகள் கிடைக்கப்போகின்றது பட்டதாரி நியமனங்கள் கிடைத்துள்ளன ஒரு இலட்சம் கிலோமீற்றர் காபட் பாதை அபிவிருத்தி திட்டத்தில் இங்குள்ள 27 பாதைகளுக்கு காபட் இடப்பட இருக்கின்றன.சிலர் 5000 கொடுப்பனவின் போது அதைச்சிலருக்கு மட்டும் கொடுத்துவிட்டு காட்டிவிட்டு போக நினைத்தார்கள். ஆனால் அமைச்சர் தொண்டமான் தலையிட்டதனால் ஜனாதிபதி அவர்கள் தகுதியான அனைவருக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்கச்சொன்னார்.இன்று நமக்கு வேலைச்செய்யக்கூடிய அரசாங்கம் வந்திருக்கின்றது.எதிர்காலத்தில் நிறைய வேலைகள் செய்வார்கள்.அதில் எமது பங்கினை நாங்கள் கேட்க வேண்டுமானால் அதற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.பெரும்பான்மை சிங்கள மக்கள் ஜனாதிபதிதேர்தலில் வாக்களித்ததை விட இலட்சம் இலட்சமாக வாக்களிக்க போகின்றார்கள்.அதேபோல் நாமும் வாக்களித்தால் தான் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு , உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் , கல்வி அபிவிருத்தி போன்றவற்றைப்பெறலாம்.நேற்று ஒரு இடத்திற்கு சென்றோம் அங்கு அவர்கள் இரண்டு மலசலகூடமாவது கட்டித்தாருங்கள் என்கிறார்கள்.அந்தளவு நாம் வேலைத்திட்டங்களை செய்யவேண்டியுள்ளது.ஆகவே அபிவிருத்திகளை நாம் செய்யவேண்டுமானால் அரசாங்கத்துடன் இணையவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
