யார் எதைக் கூறினாலும் எமது சேவை மக்களுக்காக மட்டுமே; நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதே எமது கடமை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நிலையை கருத்தில் கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.

கொரோனா தற்பொழுது பரவிய கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை நிறைவடைந்துள்ளது அதேபோன்று அங்கு பணியாற்றிய அனைத்து பயிற்றுநர்களுக்கு மற்றும் பணிநிமித்தம் இந்த நிலையத்துடன் தொடர்புபட்ட அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களிலுள்ளவர்களது பரிசோதனை அறிக்கைகள் மாத்திரமே கிடைக்க வேண்டியுள்ளது. நாளை மாலை இந்த அறிக்கைகள் அனைத்தும் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கின்றோம். புனர்வாழ்வு பெற்றுவருபவர்களை பார்வையிட வருகை தந்த 116 பேருடன் தொடர்புடைய 360 பேருடைய பரிசோதனைகளும் நிறைவடைந்துள்ளன. இவர்களில் எவரேனும் தொற்றுக்குள்ளாகியிருந்தால் அவர்களுடன் தொடர்புடையவர்களை அடையாளங்காண வேண்டியேற்படும். அதற்கமைய கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துடன் தொடர்புடைய 90 சதவீதமானவர்கள் இனங்காணப்பட்டு பரிசோதனைகளும் நிறைவடைந்துள்ளன.
புதன்கிழமை வரை 2294 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் கந்தக்காடு சம்பவத்துடன் தொடர்புடைய சுமார் 700 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 1700 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
இருந்தபோதிலும் இவை அனைத்துமே இந்த நிலையத்துடன் சம்பந்தப்பட்டவை மட்டுமே ஆனால் இதேபோன்று வரும் சில நாட்களில் மேலும் சில நோயாளர்கள் இனம் காணப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. இவற்றை மறுப்பதற்கில்லை எவ்வளவு பிசிஆர் பரிசோதனைகளை செய்ய முடியுமோ அவ்வளவு செய்ய முடிந்தால் சிறந்தது. இதைத் தீர்மானிப்பது நாம் அல்ல சுகாதாரத் துறையினர் தீர்மானிக்கவேண்டும்.
புதன்கிழமை இராஜாங்கனை பகுதியில் ஒருவர் மாத்திரமே இனங்காணப்பட்டார். இங்கு சுமார் 360 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் அதில் ஒருவருக்கு கூட தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும் அடுத்து வரும் சில நாட்கள் மிக முக்கியமானவை நாம் மீண்டும் மீண்டும் பொதுமக்களிடம் சுகாதார பாதுகாப்பு ஆலோசனைகளையும் நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று கோரி வருகின்றோம்.
மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகள் நாட்டில் பல இடங்களில் உள்ளன அவற்றில் அலுவலகங்கள் தொழிற்சாலைகள் என்பவற்றில் மக்கள் முடிந்த அளவு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் மேலும் தேவை இல்லாமல் வெளி பயணங்கள் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் இவையெல்லாவற்றையும் எம்மை விட பொதுமக்கள் கடைபிடித்தால் மட்டுமே இந்த நாட்டில் கொரோனா பரவலை முற்றாக ஒழிக்க முடியும்.
ஜனாதிபதி , பிரதமருடைய வழிகாட்டல்களுக்கு அமைய சுகாதாரத்துறை , பொலிஸ் மற்றும் ஏனைய படைகளுடன் இணைந்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் நாம் பெரும்பங்காற்றியுள்ளோம். இதுவரையில் நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரால் இயக்கப்பட்டு வருகின்ற 60 தனிமைப்படுத்தல் நிலையங்களில் சுமார் 7300 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மாத்திரமின்றி எதிர்பாராத விதமாக சமூகத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டாலும் பின்வாங்காமல் இதனை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு நாம் தயாராகவே உள்ளோம்.
நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். யார் என்ன கூறினாலும் எமது சேவை மக்களுக்காக மட்டுமே என்று கருத்துரைத்தார்.
கொரோனா வைரஸ் ஒழிப்பில் இராணுவத்தினரின் பங்களிப்பை யாராலும் நிராகரித்துவிட முடியாது. இராணுவம் இன்றி வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்திருக்குமா என்பதை நாம் கூற வேண்டியதில்லை. பொது மக்கள் இதற்கு பதிலளிப்பார்கள் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
