சல்மான்கான், கரண் ஜோஹர் மீது வழக்கு ; நீதிமன்றம் தள்ளுபடி
கடந்த சில நாட்களுக்கு முன் பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன அழுத்தத்தை உருவாக்கினார்கள் என பாலிவுட்டின் நட்சத்திர வாரிசுகள் மீது பலரும் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.
பீகாரை சேர்ந்த சுதீர்குமார் ஓஜா என் கிற வழக்கறிஞர் சுஷாந்தின் மரணத்துக்கு காரணமானவர்கள் என கூறி சல்மான் கான், கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பன்சாலி, தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ஆகியோர் மீது பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் தற்போது ஒஜாவின் மனுவை விசாரித்த பீகார் நீதிமன்றம் இது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட விஷயம் என வழக்கை பதிவு செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ஆனாலும் நீதிமன்றத்தின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த சுதீர்குமார் ஓஜா இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் சுஷாந்தின் மரணத்தால் பீகார் மக்கள் மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள் என்றும் அவரை இந்த நிலைக்கு தள்ளியவர்களுக்கு சட்டத்தின் மூலமாக தண்டனை கிடைக்கவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
