அமெரிக்காவில் 31 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு
உலகை உலுக்கி வரும் கொரோனா வைரசால், அதிகப்படியான பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. அங்கு இதுவரை, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 31.7 லட்சத்தைக் கடந்துள்ளது; 1.35 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் சேர்க்கை எண்ணிக்கை, 75 சதவீதத்துக்கு அதிகமாக நிறைவடைந்துள்ளதால், சிக்கல் அதிகரித்துள்ளது

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், ‘டெக்சாஸ் போன்ற மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில், 80 சதவீத படுக்கைகள் பூர்த்தியாகிவிட்டன. அங்குள்ள அவசரப் பிரிவு அறைகள் பாதிக்கும் மேல் பூர்த்தியாக்கிவிட்டன. பெரும்பாலான மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்காக பிற அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக மருத்துவமனைகள் நெருக்கடியை சந்தித்துள்ளன’ எனக் கூறப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்த போதிலும், கடந்த மாதத்தின் துவக்கத்தில் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், மாகாண ஆளுர்கள் மற்றும் வல்லுநர்களின் எதிர்ப்பை மீறி, ஊரடங்கில் தளர்வுகள் அளிக்க, டிரம்ப் உத்தரவிட்டார். குறிப்பாக, டெக்சாஸ், அரிசோனா உள்ளிட்ட மாகாணங்களில் உணவு விடுதிகள், மதுபானக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தேவாலயங்கள் ஆகியவை திறக்கப்பட்டன; மக்கள் நடமாட்டம் அதிகரித்தது. இதனால் தற்போது புளோரிடா, டெக்சாஸ், அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாகாணங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்த மாகாணங்களில் தலா 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
